Asianet News TamilAsianet News Tamil

கணவரின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்ட ஷர்மிளா! உருக்கமாக அஞ்சலி செலுத்திய நண்பர்கள்!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை ஆணவப் படுகொலை செய்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

Woman ends life, months after her husband was murdered in Pallikaranai sgb
Author
First Published Apr 28, 2024, 4:42 PM IST

சென்னை பள்ளிக்கரணையில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் பிப்ரவரி 24ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஷர்மிளா என்ற பெண்ணை 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

பிரவீன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை ஆணவப் படுகொலை செய்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  ஆனால், அவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் மனமுடைந்த ஷர்மிளா ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தூக்கிட்டுக்கொண்ட போது கழுத்தில் நரம்பு பாதிக்கப்பட்டதால் ஷர்மிளா கோமா நிலைக்குச் சென்றார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் ஏப்ரல் 22ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

தற்கொலை முயற்சிக்கு முன் ஷர்மிளா எழுதிய கடிதத்தில், தனது இறப்புக்கு பெற்றோர் துரை, சரளா, நரேஷ், தினேஷ் ஆகியோர் தான் காரணம் என்று கூறியுள்ளார். இதனால், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் ஷர்மிளாவின் சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, மருத்துவமனையில் ஷர்மிளா உயிரிழந்ததை அடுத்து பிரவீனின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து மூன்று நாட்களாக போராட்டம் நடத்தினர். போலீசார் பிரவீனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஷர்மிளாவின் உடலை அவர்களிடம் ஒப்படைத்தனர். பள்ளிக்கரணையில் பிரவீனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே ஷர்மிளாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

சாதிவெறியால் இதுபோல ஆணவக் கொலை செய்பவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios